கணவன் மனைவி உறவு ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர்களுக்குள் செக்ஸ் உறவு என்பது நன்றாக இருக்கவேண்டும். மிக அவசியமானதும் கூட. இதை தவிர்ப்பது என்பது இருவருக்குமே பாதிப்பை மன அளவில் ஏற்படுத்தும். பல விவாகரத்துக்கு இதுதான் அடிப்படை காரணம் என்பது அதிர்ச்சியுடன் கூடிய உண்மை.
இந்த உறவை பொறுத்தவரை கணவன் விருப்பபட்டு அழைக்கும் போது மனைவி மறுப்பதுதான் பெரும்பாலான வீட்டிலும் நடைமுறையில் இருக்கிறது. அது ஏன் என்பது தெரியாமல் பல கணவர்களும் தவித்து போய் விடுவார்கள். இதனால் மன அழுத்தம் அதிகமாகி பாதிக்கப்பட்டவர்கள் பலர்.
ஆண்களுக்கு மட்டும் ஏன் அந்த எண்ணம் அதிகமாக இருக்கிறது என்ற ஒரு கேள்வி நான் சந்தித்த பல பெண்களிடமும் இருக்கிறது. "அந்த ஆளுக்கு வேற நினைப்பே கிடையாது எப்பவும் அந்த நினைப்புதான்....?! பிள்ளைங்க வேற வளர்ந்திட்டாங்க. இப்பவும் அப்படியே இருக்க முடியுமா..?? என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாரு..." இந்த மாதிரியான புலம்பல்கள் தான் பலரிடமும்...!
ஏன் இதை ஒரு வேலையாகவோ, அசிங்கமாகவோ, அருவருப்பானதாகவோ நினைக்க வேண்டும் ?? தினம் மூன்று வேளை உணவு என்பது உடம்பிற்கு எந்த அளவிற்கு அவசியமோ அந்த மாதிரி 'அளவான உடல் தொடர்பான உறவும் அவசியம் தான்' என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
கணவனின் தேவை என்ன என்பதை ஒவ்வொரு மனைவியும் புரிந்து கொண்டு உறவுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திக்கொண்டு கணவனை கவனிக்கும் போதுதான் அந்த கணவனும் மன நிறைவுடன் புத்துணர்ச்சி அடைவான், நீங்களும் உற்சாகம் அடைவீர்கள். அதைபோல் மனைவியின் விருப்பம் என்ன , சூழ்நிலை என்ன என்று கணவனும் புரிந்து கொண்டு நடந்து கொண்டால் சம்சாரம் ஒரு சங்கீதம் தான்.
மறுப்பது எதனால் ??
சில நேரம் கணவனோ, மனைவியோ ஒருவருக்கு விருப்பம் இருந்து அதை மற்றொருவர் மறுக்க வேண்டிய நிலை ஏற்படும். பொதுவாக பார்த்தோம் என்றால் இது ஒரு சாதாரண விசயமாக தோன்றலாம்...ஆனால் 'உறவு மறுத்தல்' என்பது உடனே கொல்லும் விஷம் போன்றது. ( மனதை ) இதனால் ஏற்படும் கோபம் பயங்கர வெப்பமாக இருக்கும், நெருப்பை போல் சுடும்.
ஒருநாள் உறவு மறுத்தலானது கூட கணவன், மனைவி உறவையே கெடுத்து விடுகிறது. தன்னை பிடிக்கவில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது , தங்களை அலட்சியப்படுத்துவதாக எண்ணி உள்ளுக்குள் மருகுகிறார்கள். நாளடைவில் மன அழுத்தம் அதிகமாகி தன்னை மறுத்தவர் மேல் உள்ள கோபத்தை, வெறுப்பை வார்த்தைகளில் கொட்டுவார்கள். அவர்கள் செய்யும் சின்ன சின்ன தவறையும் பெரிதாக எண்ணி கூச்சலிடுவார்கள். இதன் தொடர்ச்சியாக அடுத்து வருவது தான் துணையின் மீதான சந்தேகம்...??! தன்னை தவிர்க்க காரணம் வேறு ஒருவரின் பால் ஏற்பட்ட ஈர்ப்பாக இருக்குமோ என்பதில் வந்து நின்றுவிடுகிறது.
இப்படியாக நீண்டு கொண்டே செல்லும் பிரச்சனை முதலில் வார்த்தையால் நோகடிப்பது, சண்டை, சில நேரம் கை நீட்டல் என்று போய்விடுகிறது.
காரணங்களும் விளக்கங்களும்
* உண்மையில் கணவனோ, மனைவியோ ஒருவர் உறவுக்கு அழைக்கும் போது இன்னொருவர் மறுப்பதற்கு 99 சதவீதம் செக்ஸ் காரணமாக இருப்பது இல்லை. அதாவது செக்ஸ் ஐ மறுத்தாலும் காரணம் செக்ஸ் கிடையாது, இருவருக்கும் இடையில் இருக்கும் உறவுகளில் ஏற்பட்ட புரிந்துகொள்ளாமை தான் காரணமாக இருக்கும். தங்களது கோபத்தை இந்த நேரத்தில், இதில் தான் காட்டுவார்கள்.* அப்புறம் நேரம், உடல் சோர்வு, தூக்கம், உடல் நல குறைவு இவையும் காரணமாக இருக்கலாம்.
* "இரண்டு பிள்ளைகள் ஆயிருச்சு, பிள்ளைகள் வேற வளர்ந்திட்டாங்க.இனிமே என்ன ?"
என்பது மாதிரியான சில மனைவிகளின் சலிப்பான பதில்கள், எண்ணங்கள்..!
விளக்கங்கள் சில
* மனைவி அல்லது கணவன் உறவை தவிர்க்கிறார் என்றால் அவர் செக்சை தவிர்கிறாரே தவிர, உங்களையே தவிர்க்கிறார் என்று அர்த்தம் இல்லை !
* மறுப்பதற்கு என்ன காரணம் என்பதை பேசி தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும். மறுப்பவர் காரணத்தை சொல்லி விட வேண்டும்.
* மறுப்பது சுலபம் ஆனால் அதனால் ஏற்படும் மனவலியை மறுப்பவர் புரிந்து கொள்ள வேண்டும்.
* ஒருவேளை உறவு கொள்வதில் ஏதும் பிரச்சனை இருந்து, அதன் காரணமாக தான் உறவை தவிர்பதாக இருந்தால் கட்டாயம் மருத்துவரை சந்திப்பது உத்தமம். அலட்சியம் இந்த விசயத்தில் தயவு செய்து வேண்டாம்.
" பல ஆண்களுக்கு அவர்களின் சுய மதிப்பீடு என்பது சம்பாதிக்கும் திறனையும், செக்ஸ் ஆற்றலையும் சார்ந்தே உள்ளது. இதில் எதைக் காயப்படுத்தினாலும் வெறுத்து போய் விடுவார்கள் "
இதை பெண்கள் கொஞ்சம் புரிஞ்சி கொள்ளனும்.
மனோரீதியாக அதிக ஈர்ப்பு கொண்ட தம்பதிகளின் செக்ஸ் வாழ்க்கை மிக இன்பகரமானதாக இருக்கும். அவர்களுக்குள் இருக்கும் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளை கூட சிறப்பான செக்ஸ் வாழ்க்கை வேகமாக போக்கிவிடும்.