குழந்தை பாலியல் வன்கொடுமை:
தினமும் செய்தித்தாளில் எங்கேனும் ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை வாசித்துக்கொண்டே இருக்கிறோம். அல்லது கேள்விப்படுகிறோம். தினமும் நிகழ்ந்துகொண்டு தான் உள்ளது. நமக்கு அறிய வருவன மிகச்சிலவே.
அதிகமாக பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள். அதுவும் அவர்கள் பாதிக்கப்படுவது மிக நெருங்கிய உறவுக்காரராலோ நண்பராலோ தான்.
அப்படி குழந்தைகளை இதற்கு உட்படுத்துபவர்கள்
வெளியில் சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்றோ, "இது தெரிந்தால் அப்பா
அம்மா உன்னை தான் தண்டிப்பர்" என்றோ சொல்லி அந்தக் குழந்தையை மிரட்டி
வைத்து விடுகின்றனர். அல்லது அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்களை அல்லது
பொருட்களை வாங்கிக் கொடுத்தோ காரியத்தை சாதிக்கின்றனர். விளைவு மீண்டும்
மீண்டும் அந்தக் குழந்தை அதே நபர்களால் நாசம் செய்யப்படுகின்றனர்.
குழந்தைகள் பயத்தினால் இதைக்குறித்து யாரிடமும் சொல்வது இல்லை.
இதற்கு காரணம் பெற்றோராகிய நாம் தான். குழந்தைக்கு இதைக்குறித்து எதுவும் நாம் சொல்லிக்கொடுப்பது இல்லை. குழந்தைகள் சொல்வதை பெற்றோர் காது கொடுத்து கேட்பதும் இல்லை.
சரி இதை எப்படி சரி செய்யலாம். குழந்தைகளிடம் நெருங்கிப் பழகுங்கள், அவர்களுடன் தோழமை பாராட்டுங்கள், எந்த நிகழ்வானாலும் அதை உங்களிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல் பகிர்ந்து கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்குங்கள். நிச்சயம் இந்த பிரச்சினையை சரி செய்வதற்கான முதல் படி அது தான்.
எல்லாரையும் நம்மால் சந்தேகம் கொள்ள முடியாது. எல்லாரிடமும் கவனமாக இருக்கவும் முடியாது, ஏனெனில் நாம் இல்லாத நேரங்களிலும் இடங்களிலும் தான் இது நிகழும்.
குழந்தைக்குப் பிடிக்காததை யாரேனும் செய்தல் உடனே கூச்சல் இட சொல்லுங்கள். எனக்கு இது பிடிக்கவில்லை என்று எதிர்ப்பு தெரிவிக்க சொல்லுங்கள். அம்மாவிடம் கூறி விடுவேன் என்று மிரட்ட சொல்லுங்கள். அப்போது குழந்தை அப்படி செய்துவிட்டால் நம் மானம் பரிபோய்விடும் என்று பயந்து அதைச் செய்ய முற்பட மாட்டார்கள்.மிகவும் தனிமையான
இடத்திற்கு
அழைத்தால் போக வேண்டாம் என்று சொல்லுங்கள். எப்போதும் குழந்தைகளை உங்களின்
பார்வை வட்டத்துக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள்.
அவர்களுக்கு நேரம் ஒதுக்கி அன்றைய தினம் வகுப்பில், வெளியில் என்ன நடந்தது என்று தினசரி அவர்களிடம் பேசும் பழக்கத்தை முதலில் பெற்றோர் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது நீங்கள் கேட்காமலே தினமும் குழந்தை தினசரி நடந்தவைகளைப் பற்றி கூறும்.
இது போன்ற குற்றம் நிகழ்ந்தாலும் உங்களிடம் நிச்சயம் பகிர்ந்து கொள்ளும். அம்மா அந்த அங்கிள் இப்படி செய்தார் அந்த ஆண்டி இப்படி செய்தார் என்று நிச்சயம் உங்களிடம் கூறுவார்கள். நீங்களும் உஷாராகலாம்
இந்த பாலியல் குற்றங்களை முற்றும் தடுக்க இயலாது. ஆனால் நமது
குழந்தைகளுக்கு சிறிதேனும் அதைபற்றி சொல்லிக் கொடுத்து முடிந்த வரை
அவற்றில் இருந்து தப்பிக்க முடியும்.
இவற்றினால என்ன பதிப்பு வரப்போகிறது என்று நினைத்தால் அது உங்களுக்கு மிகப்பெரிய இடியாய் வந்து விழும்.ஆம், பாதிக்கப்பட்ட குழந்தை குறிப்பிட்ட பாலினத்தையே வெறுக்கத் துவங்கலாம். பள்ளி, கல்லூரி, அலுவலகம் ஏன் திருமண பந்தம் வரை கூட பாதிப்புகள் எதிரொலிக்கும். அளவிற்கு அதிகமான மனச்சோர்விற்கு ஆளாகலாம். கல்வியில் பின்தங்கலாம், திருமண பந்தமே வேண்டாம் என்றும் சொல்லலாம். அப்படியே திருமணம் செய்தாலும் மகிழ்வான பந்தத்தை அவர்கள் நடத்திச் செல்வார்களா என்பது சந்தேகமே.
அகவே குழந்தைகளிடம் அதிக அக்கறை செலுத்துங்கள். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டியது நமது கடமை.
இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் தான் எந்தக் குழந்தையையும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த மாட்டேன் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் 2 நிமிட அற்ப சிற்றின்பத்திற்காக செய்யும் இந்தக் குற்றம் ஒரு குழந்தையின் எதிர்காலத்தையும் அவர்களின் குடும்பத்தையும் சிதைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.